*விக்கிரமாதித்தன் கதைகள்*
*மதன்மோகினி கதை*
தாயார் இதை பவளனின் தந்தையிடம் கூற, அவர் பவளனிடம், ‘அந்தப் பெண் யார்? எந்த ஊர்?’ என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொண்டு, ‘இதற்காகவா, உண்ணாமல் உறங்காமல் நீயும் துன்பப்பட்டு, எங்களையும் கஷ்டப்படுத்தினாய்? அந்தப் பெண்ணின் தகப்பன் எனது நண்பன்தான். பொன் பொருள், குலம், அந்தஸ்து என்று அனைத்திலும் நாமும் அவனுக்கு நிகரானவர்கள்தான். எனவே நான் பெண் கேட்டால் அவன் மறுக்க மாட்டான்.
கவலைப்படாதே!’ என்றார்.
அதுபோலவேதான் நடந்தது. மதனமோகினியின் தந்தை மிகுந்த சந்தோஷமாக பவளனுக்கு தனது மகள் மதனமோகினியை திருமணம் செய்து தர ஒப்புக்கொண்டார். அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.
மனைவி மதனமோகினியுடன் வீடு திரும்பிய பவளன் மிகுந்த சந்தோஷமாக அவளுடன் இல்லறம் நடத்தினான். மணமக்கள் சல்லாபக் கடலில் மூழ்கித் திளைத்து இன்பத்தை அள்ளி அள்ளிப் பருகினார்கள். காலம் களிப்புடன் நகர்ந்தது.
திருமணமாகி சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில் ஒருநாள் மதனமோகினியின் அண்ணன் மதனபாலன் தனது தங்கையின் வீட்டுக்கு வந்தான். தங்கையும், தங்கையின் கணவனான பவளனும், அவனது பெற்றோரும் மதனபாலனை மிகுந்த அன்புடன் வரவேற்றனர். அன்றைய தினம் தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்து மதனபாலனை திணறத் திணற உபசரித்து மகிழ்ந்தனர்.
சாப்பாடு இன்னபிற உபசாரங்கள் எல்லாம் முடிந்ததும் மதனமோகினியின் அண்ணன் தங்கையின் புகுந்த வீட்டாரிடம், சொன்னான். ‘ஊரிலே துர்க்காதேவி கோயில் உற்சவத் திருவிழா தொடங்கிவிட்டது. தங்கையுடன் உங்கள் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி அப்பா அனுப்பி வைத்தார்’ என்று கூறினான்.
பவளனின் அப்பா அவனிடம், ‘அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்.’ என்றவர், தனது மகன் பவளனிடம் திரும்பி, ‘பவளா! முதலில் நீயும் உன் மனைவியும் நாளைக் காலையே உனது மைத்துனனுடன் புறப்பட்டுச் செல்லுங்கள்! எனக்கு இங்கே ஒரு சிறிய வேலை இருக்கிறது. அதை முடித்துக்கொண்டு நானும் உன் அம்மாவும் இரண்டொருநாள் கழித்து வருகிறோம்!’ என்றார்.
அவர் சொன்னதுபோலவே மறுநாள் காலையில் பவளன், மனைவி மதனமோகினி, மைத்துனன் மதனபாலனுடன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டான்.
அவர்கள் பிரகஹ்புரத்தை அடையும்பொழுது உச்சிப்பொழுது நெருங்கி விட்டது. நகரத்தின் நுழைவாயிலிலேயே அமைந்திருந்த துர்க்கையம்மனின் கோயிலைக் கண்டபோதே பவளனின் இதயம் சிலிர்த்தது. கடந்து போன திருவிழா நாள்கள் நினைவுக்கு வந்தது. மதனமோகினியைக் கண்டு ஏங்கியதும், அம்மனின் சந்நியில் தான் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையும், அதுபோலவே பேரழகி மதனமோகினி தனக்கு மனைவியாகக் கிடைத்த ஆனந்தமயமான வாழ்க்கையும் மனத்துக்குள் அலைமோதியது.
நன்றியுணர்வில் மனம் நெகிழ்ந்த பவளன் உணர்ச்சிப் பெருக்கு மேலிட துர்க்கையம்மன் சந்நிதியில் தனது பிரார்த்தனையை நிறைவேற்றத் தயாரானான். மனைவி மைத்துனனிடம் ஏதும் சொல்லாமல் அவர்களை கோயிலின் பிரமாண்டமான ஆலமரத்து நிழலில் அமர்த்தி விட்டு, ‘மோகினி, நீயும் உனது அண்ணனும் களைத்துப் போயிருக்கிறீர்கள். எனவே இங்கேயே அமர்ந்து இளைப்பாறுங்கள். நான் போய் துர்க்கையம்மனை தரிசித்து வணங்கிவிட்டு வருகிறேன்!’ என்று சொல்லி அவர்களை அமரச் செய்து விட்டு சந்நிதிக்குள் புகுந்தான்.
மகிஷாசூரமர்த்தினியாக கோலம் கொண்டிருந்த துர்க்கையம்மனை தரிசித்தவன், அவளிடம், ‘தேவி தயாபரி! துர்க்காமாதா! எனது ஆசையை நிறைவேற்றி ஆனந்த வாழ்வளித்தாய். இந்த ஒரு வருடம் மிகுந்த மனத் திருப்தியுடன் என் மனைவியுடன் வாழ்ந்துவிட்டேன். அது போதும் எனக்கு. இதோ, நான் உனக்கு அளித்த வாக்குப்படி என் தலையை உனக்கு காணிக்கையாக்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு சுற்று முற்றும் பார்த்தான்.